செய்திகள்
ஆ.ராசா

வக்கிர புத்தியோடு அமைச்சர் கருப்பணன் பேசுகிறார் - ஆ.ராசா எம்.பி. கடும் கண்டனம்

Published On 2020-01-27 12:09 GMT   |   Update On 2020-01-27 12:09 GMT
தி.மு.க. வெற்றி பெற்ற உள்ளாட்சி பகுதிகளுக்கு குறைந்த நிதியே ஒருக்குவோம் என்று கூறிய அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு ஆ.ராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள்விழா பொதுக் கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

அப்போது அவர் பேசும் போது தி.மு.கவையும். கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக தாக்கி பேசினார்.

“பொய் வாக்குறுதிகளை கூறி தி.மு.க.வினர் ஏமாற்றி எம்.பி.தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். இப்போது தி.மு.கவினரை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர். இதனால் தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபைஇடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பதிலடி கொடுத்து உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து இனி தி.மு.க.வுக்கு தோல்விதான் கிடைக்கும், மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சர் கனவு பலிக்காது, அவர் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது” என்று கூறினார்.

“உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்களுக்கு குறைவான நிதியை மட்டுமே ஒதுக்குவோம்” என்றும் கூறினார்.

அமைச்சர் கருப்பணனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு தி.மு.க. தலைவர்கள் கரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.கபொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் அமைச்சரை கண்டித்துள்ளார். தி.மு.க. வெற்றி பெற்ற உள்ளாட்சி பகுதிகளுக்கு குறைந்த நிதியே ஒருக்குவோம் என்று கூறிய அமைச்சர் கே.சி.கருப்பணனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தமிழக கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் அமைச்சர் கருப்பணன் பேச்சுக்கு முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசாவும் கண்டனம் தெரிவித்தார்.

சத்தியமங்கலத்தில் ஆ.ராசா நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்ட ஊராட்சியாக இருந்தாலும், ஒன்றிய ஊராட்சியாக இருந்தாலும், இவைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற தொகை, மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

இதில் மாநில அரசாங்கத்தால் சிறிதளவு, அதாவது மேட்சிங் சேர் எனப்படும் பங்குத்தொகை, அங்கிருக்கின்ற மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனை எந்த அமைச்சரோ, அதிகாரியோ தடுத்த நிறுத்த முடியாது.

மீறி தடுத்து நிறுத்தினால் அதனை கண்டறிந்து சரி செய்ய ஆயிரம் வழிகள் உள்ளது. இந்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் அமைச்சர் பேசிய பேச்சு அதிகார வக்கிர புத்தியோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, திராவிட முன்னேற்ற கழகம் எங்கெங்கெல்லாம் வெற்றி பெற்றுள்ளதோ, அங்கெல்லாம் நிதி ஒதுக்க மாட்டோம் என கூறியிருப்பது கேலிக்குரியது.

அரசியல் அமைப்பு சட்டத்தின் படி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய அமைச்சர், எதிர்கட்சியினர் வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என பகிரங்கமாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதியை ஒதுக்கீடு செய்து நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். அடுத்த ஓராண்டு காலத்திற்குள் அமையவுள்ள திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் மூலமாக அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்துவோம்.

இவ்வாறு ஆ.ராசா கூறினார்.
Tags:    

Similar News