செய்திகள்
கைது

10 வருடங்களாக தலைமறைவாக இருந்த கார் திருடன் கைது

Published On 2020-01-17 11:07 GMT   |   Update On 2020-01-17 11:07 GMT
10 வருடங்களாக தலைமறைவாக இருந்த கார் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

கேரள மாநிலம் வயநாடு, பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 46), கார் வாடகைக்கு வைத்து ஓட்டி வருகிறார்.

இவர் கடந்த 2007-ம் ஆண்டு சேலத்தில் இருந்து கேரளா செல்வதற்காக தனது காரில் பெருந்துறை வழியாக வந்தார். பெருந்துறையை அடுத்த ஏரிக்கருப்பராயன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது. அவர்கள் ஜோஸ் காரை நிறுத்தி ஈரோடு வாடகைக்கு செல்ல வேண்டும் என கூறி காரில் ஏறினர்.

காரில் ஏறிய அவர்களில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஜோஸின் கை கால்களை கட்டினர். பிறகு அவர்கள் அவரை காரில் இருந்து இறக்கி அருகில் இருந்த பள்ளத்தில் போட்டு விட்டு காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அந்த கும்பளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நந்து என்ற நந்த குமார் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான வழக்கு ஈரோடு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அவர்கள் 7 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நந்தகுமார் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

தலைமறைவானவரை தனிப்படை அமைத்து பெருந்துறை போலீசார் தேடிவந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஊட்டி அருகே உள்ள தேவாலா, நாடுகாணி பகுதியில் உள்ள அவனது வீட்டிற்கு வந்த நந்தகுமாரை பெருந்துறை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தவரை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News