செய்திகள்
ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2020-01-04 17:11 GMT   |   Update On 2020-01-04 17:11 GMT
நரிமணம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:

திட்டச்சேரி அருகே நரிமணம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் 2012-13-ம் ஆண்டில் ரூ.21 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

இந்த நீர்த்தேக்க தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் சுல்லாங்கால், நாரயணமங்கலம், வடக்குத்தெரு, தெற்குதெரு, கீழத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் இந்த நீர்த்தேக்க தொட்டி எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இந்த தொட்டியின் அருகே ஊராட்சி சேவை மையம், மாரியம்மன் கோவில் உள்ளிட்டவை அமைத்துள்ளதால் சிறுவர், சிறுமிகள் இதன் அருகே ஆபத்தை உணராமல் விளையாடி கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Tags:    

Similar News