செய்திகள்
மரணம்

கவுந்தப்பாடி அருகே என்ஜினீயர் மர்மமரணம்- போலீசார் விசாரணை

Published On 2020-01-03 15:48 IST   |   Update On 2020-01-03 15:48:00 IST
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே வீட்டிலிருந்து வெளியே சென்ற என்ஜினீயர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையம் குளத்து வீதியை சேர்ந்தவர் முருகன் பெயிண்டர். இவரது மனைவி பெயர் சுலோச்சனா.

இவரது மகன் முத்துகோபால் (வயது 27). சிவில் என்ஜினீயர். இவர் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தனது பாட்டி குப்பாயாள் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முத்துகோபால் பாட்டி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் காணாமல் போன சிவில் என்ஜினீயர் முத்துகோபால் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே பிணமாக கிடந்தார். அவரது உடலிருந்து துர்நாற்றம் வீசியது. அவர் இறந்து சில நாட்கள் ஆகி இருக்க கூடும் என தெரிகிறது.

அவரது முகம் வீங்கியபடி இருந்தது. இதனால் அவரது சாவில் மர்மம் உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News