செய்திகள்
நீலியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது
இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரில் நீலியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரில் நீலியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 31-ந்தேதி இரவு மர்மநபர்கள் கோவிலுக்குள் சென்று உண்டியலை உடைத்துள்ளனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. பின்னர் மர்மநபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடி விட்டனர். அலாரம் சத்தத்தை கேட்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்த தகவல் அறிந்த ஆலத்தூர் பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மர்மநபர்களை அப்பகுதியில் தேட தொடங்கினர். அப்போது கோவில் அருகே உள்ள புதர் பகுதியில் மறைந்திருந்த 3 பேரை பிடித்து இலுப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் மர்மநபர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் மாவட்டம் குளத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 31), திருப்பூர் சந்திராபுரம் இந்திரா நகரை சேர்ந்த சுரேந்திரன் (37), திருப்பூர் பாலையக்காடு கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த கோபி (40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கோவில் உண்டியலை உடைத்து திருடிய ரூ.26 ஆயிரத்து 488-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.