செய்திகள்
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தேசியக்கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி 650 அடி நீள தேசியக்கொடியை ஏந்தி நாகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்:
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் 650 அடி நீளமுள்ள தேசியக்கொடியை ஏந்தி நாகையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நிஜாமுதீன் தலைமை தாங்கினார். நாகை தலைமை தபால் நிலையம் முன்பு தொடங்கிய பேரணி நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் தெரு, அண்ணாசிலை வழியாக நாகை அவுரித்திடலுக்கு வந்தது. பேரணி தொடங்குவதற்கு முன்பு தேசியகீதம் பாடப்பெற்றது. இதைத்தொடர்ந்து 650 அடி நீளம் கொண்ட தேசியக்கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.
பேரணியில் செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மதிவாணன், தமிமுன்அன்சாரி, நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாபிள்ளை, நகர செயலாளர் ராஜேந்திரசோழன் மற்றும் அ.ம.மு.க, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், இந்த சட்டத்துக்கு ஆதரவு அளித்து வரும் மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் நாகை அவுரி திடலில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், ஆண்கள் என அனைவரும் தாங்கள் வைத்திருந்த செல்போனில் விளக்கை எரிய விட்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.