செய்திகள்
தமிழ்

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த புதுக்கோட்டை வாலிபர்

Published On 2019-12-31 04:59 GMT   |   Update On 2019-12-31 04:59 GMT
தமிழகத்தில் நடைபெற்ற 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ரூ.50 ஆயிரம் செலவு செய்து சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்து புதுக்கோட்டை வாலிபர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர் தமிழ் (வயது 26). இவர் சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தமிழ்நாட்டில் 8 வருடத்திற்கு பிறகு தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தகவல் தமிழுக்கு உறவினர்கள் மூலம் தெரியவந்தது.

உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் முடிவு செய்தார். வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை என்பதை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் புறப்பட்டார்.

இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது . இதற்காக கடந்த 28-ந் தேதி வடகாடு கிராமத்திற்கு தமிழ் வந்தார். நேற்று வடகாடு வாக்குச்சாவடியில் தனது வாக்கினை அவர் பதிவு செய்தார். உள்ளாட்சித்தேர்தலில் ஓட்டுப்போட சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த தமிழை கிராம மக்கள் பாராட்டினர்.

அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் எனக்கூறினர். பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து தமிழ் வாக்களிக்க வந்த நிலையில் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சில வாக்காளர்கள் சோம்பலால் வாக்குச்சாவடிக்கு வராமல் இருப்பது தவறு, இது ஜனநாயக கடமை என்று கூறும் தமிழ், கடந்த 2019 மே மாதம் நடந்த பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்கவும் விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை சிலர் வாங்கும் நிலையில் தமிழ், சிங்கப்பூரில் இருந்து வந்து செல்ல விமான கட்டணம் ரூ.50 ஆயிரம் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News