செய்திகள்
கைது

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- காவலர் கைது

Published On 2019-12-24 16:44 IST   |   Update On 2019-12-24 16:44:00 IST
நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீசில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் அந்தபுகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரியும் அய்யாசாமி என்பவர் புத்தகரம் கிராமத்தில் உள்ள அந்த சிறுமியின் வீட்டிற்கு விசாரணைக்காக வந்துள்ளார். அப்போது வீட்டில் செந்தில்குமாரின் மகள் மற்றும் மகன் மட்டுமே இருந்துள்ளனர்.

அப்போது அய்யாச்சாமி சிறுவனுக்கு பணம் கொடுத்து கடைக்கு அனுப்பிவிட்டு சிறுமியிடம் விசாரணை நடத்துவதுபோல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து செந்தில்குமார் இது சம்பந்தமாக நன்னிலம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறையிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து காவல் அய்யாச்சாமியை திருவாரூர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனால் திருவாரூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவலர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் எனவே பாலியல் தொல்லை கொடுத்த காவலர் அய்யாசாமி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறை நாகை மாவட்ட அனைத்து மகளிர் போலீசில் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதனைதொடர்ந்து சிறுமி மற்றும் அவரது பெற்றோர்களிடம் நாகை அனைத்து மகளிர் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினர். அதில் அய்யாச்சாமி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் காவலர் அய்யாசாமியை போலீசார் கைது செய்தனர். 15 வயது சிறுமிக்கு காவலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News