செய்திகள்
சிறுமிகள் மீட்பு

நாகை பஸ் நிலையத்தில் ரூ.1¼ லட்சம் பணத்துடன் மாயமான 3 சிறுமிகள் மீட்பு

Published On 2019-12-21 15:29 IST   |   Update On 2019-12-21 15:29:00 IST
நாகை பஸ் நிலையத்தில் ரூ.1¼ லட்சம் பணத்துடன் மாயமான 3 சிறுமிகளை மீட்ட போலீசார் அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
நாகப்பட்டினம்:

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் சத்யா (வயது 11) .

இவர் தனது தோழிகள் அட்சயா(11), சபினா(11) ஆகியோருடன் வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் நேற்று மாலை காணாமல் போனார்.

பின்னர் இது குறித்து செல்லூர் போலீஸ் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் மதுரை போலீசார், பணத்துடன் மாயமான 3 சிறுமிகளையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு நாகை புதிய பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்த 3 சிறுமிகளை அங்கிருந்த புறக்காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது மதுரையில் இருந்து தாங்கள் வந்ததாகவும், வேளாங்கண்ணியில் வசித்து வரும் தனது தாய் சூர்யாவை பார்க்க வந்ததாகவும், சிறுமி சத்யா கூறியுள்ளார்.

அப்போது போலீசார் சிறுமிகளிடம் துருவி துருவி விசாரித்தபோது, 3 பேரும் மதுரையில் இருந்து பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறி வந்ததை தெரிவித்தனர். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் சிறுமிகளை மீட்ட நாகை போலீசார் எஸ்.பி அலுவலகம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நாகை எஸ்.பி செல்வநாகரத்தினம் முன்னிலையில் சிறுமிகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Similar News