செய்திகள்
கோப்பு படம்

கடல்நீர் புகுந்து கிராமம் மூழ்கும் அபாயம் - கருப்புகொடியுடன் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்

Published On 2019-12-20 21:02 IST   |   Update On 2019-12-20 21:02:00 IST
தரங்கம்பாடி அருகே கடல்நீர் புகுந்து கிராமம் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ளது சின்னமேடு மீனவகிராமம். இங்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இங்குள்ள கடலில் அரிப்பு ஏற்பட்டு 1 கி.மீ. தூரத்துக்கு சின்னமேடு கிராமம் கடலில் மூழ்கிவிட்டது.

இந்த நிலையில் சில நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு 50 மீட்டர் தூரம் கடல்நீர் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனால் 2 வாரமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் உள்ளனர்.

கடல் அரிப்பு ஏற்பட்டால் ஊருக்குள் கடல்நீர் புகாமல் இருக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சின்னமேடு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலில் நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்த பொறையார் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இருப்பினும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News