செய்திகள்
நித்தியானந்தா

பல் டாக்டர் சிறை வைப்பு: நித்தியானந்தாவுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்

Published On 2019-12-20 07:39 GMT   |   Update On 2019-12-20 09:06 GMT
சட்டவிரோதமாக பல் டாக்டர் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட ஆட்கொணர்வு வழக்கில், நித்தியானந்தாவுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை:

ஈரோட்டை சேர்ந்தவர் அங்குலட்சுமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது மகன் பிரானாசாமி பல் மருத்துவராக பணி புரிந்து வந்தார். திடீரென நித்யானந்தா சீடராக மாறிய அவர் கடந்த 15 வருடங்களாக பெங்களூர் அருகே உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்து வந்தார்.

ஆனால் தற்போது எனது மகனை பார்க்கவோ, பேசவோ ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. நித்யானந்தாவின் சட்ட விரோத காவலில் இருந்து எனது மகனை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடத்தப்பட்டது.

அங்கு லட்சுமி அளித்துள்ள புகார் குறித்து 4 வாரங்களுக்குள் நித்தியானந்தா பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அங்குலட்சுமி புகார் அளித்து இருந்தார். இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்க ஈரோடு போலீசாருக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


நித்தியானந்தாவுக்கு எதிராக ஏற்கனவே கர்நாடக மற்றும் குஜராத் மாநில கோர்ட்டுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

இந்த நிலையில் 3-வதாக ஐகோர்ட்டும் நித்தியானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News