செய்திகள்
ஆர்ப்பாட்டம் செய்ய வந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் அறிவுரை கூறிய காட்சி

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்த திரண்ட ஈரோடு கல்லூரி மாணவர்கள்

Published On 2019-12-18 17:14 IST   |   Update On 2019-12-18 17:14:00 IST
ஈரோடு அருகே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு:

மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை மசோதாவை தாக்கல் செய்து அது நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை கண்டித்து அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் குடியுரிமை மசோதாவை கண்டித்தும் அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து இந்த வி‌ஷயம் விசுவரூபம் எடுத்தது. குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தும் உள்ளிருப்பு போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு சி.என்.சி. கல்லூரி மாணவர்கள் குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து கல்லூரி வளாகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை கல்லூரி நுழைவுவாயில் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டு வந்தனர். அப்போது கல்லூரி முதல்வர் அங்கு வந்து போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை தடுத்து நிறுத்தி உங்கள் போராட்டத்திற்கு வெளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்குள் வரக்கூடாது.

நீங்களே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமென்றால் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார். இதை ஏற்று ஆர்ப்பாட்டத்திற்கு வந்த மாணவர்கள் கல்லூரிக்குள் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Similar News