செய்திகள்
கோப்பு படம்

கடன் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த கோவை பெண் சிறையில் அடைப்பு

Published On 2019-12-18 10:57 GMT   |   Update On 2019-12-18 10:57 GMT
ஊட்டி அருகே வீடு கட்ட கடன் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த சுரேஷ் மற்றும் சிலர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.

அதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட 4 பேர் சில மாதங்களுக்கு முன் தாங்கள் டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், அதன் மூலம் வீடு மற்றும் திருமணம் நடத்துவதற்கு கடன் கொடுத்து வருவதாகவும், அதற்கு முன்வைப்புத் தொகை தர வேண்டும் என்று கூறினர்.இதை நம்பி 65 பேர் அவர்களிடம் முன் பணமாக ரூ.30 ஆயிரம் வீதம் இதுவரை ரூ.18 லட்சத்துக்கு மேல் கொடுத்துள்ளோம். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர்கள் கடன் வழங்கவில்லை. முன் பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வாட்டர் டேங்க் ரோடு வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்த ரூபினி பிரியா(வயது 29) என்பவர் மோசடியில் ஈடுபட்டதும், அவருக்கு துணையாக கோவை குமரகுன்று பகுதியை சேர்ந்த சிவா, வெங்கடேஷ், டிரைவர் கார்த்திக் ஆகியோர் உதவியதும் தெரிய வந்தது.

மேலும் இவர்கள் இதேபோல் பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர், தேவகோட்டை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பொள்ளாச்சிக்கு விரைந்து வந்து வீட்டில் இருந்த ரூபினி பிரியாவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

ரூபினி பிரியா போலி டிரஸ்ட் நடத்தி வந்துள்ளார். அதன் மூலம் ஊட்டியில் வெங்கடேஷ், கார்த்திக் ஆகியோரின் உதவியுடன் ஏஜெண்டுகளை நியமித்து மக்களிடம் வீடு கட்டவும், திருணத்திற்கு கடன் தருவதாகவும் கூறி இதுவரை 65 பேரிடம் இருந்து ரூ.18 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ரூபினி பிரியாவை கைது செய்து விட்டோம். இதில் தொடர்புடைய சிவா என்பவர் மற்றொரு வழக்கில் சிறையில் உள்ளார். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறோம் என்றனர். இதையடுத்து ரூபினி பிரியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீடு கட்ட கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.
Tags:    

Similar News