செய்திகள்
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், பயிற்சி வனச்சரகர்களுக்கு அறிவுரை கூறியபோது எடுத்தபடம்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் 17 பயிற்சி வனச்சரகர்கள் பொறுப்பேற்பு

Published On 2019-12-17 18:31 GMT   |   Update On 2019-12-17 18:31 GMT
முதுமலை புலிகள் காப்பகத்தில் 17 பயிற்சி வனச்சரகர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.
ஊட்டி:

மலை மாவட்டமான நீலகிரியில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளது. இங்குள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து, விரிந்து காணப்படுகிறது. இதில் காட்டு யானை, புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, கடமான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதிகளையொட்டி உள்ள கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் தடுக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு புதியதாக 17 பயிற்சி வனச்சரகர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் அலுவலகத்தில் பயிற்சி வனச்சரகர்கள் 17 பேர் பொறுப்பேற்று கொண்டனர். அவர்களுக்கு கள இயக்குனர் கவுசல் வாழ்த்து தெரிவித்ததோடு, ஆங்கில மொழித்திறனை வளர்க்க வேண்டும், நல்ல ஒழுக்கத்தோடு பணிபுரிய வேண்டும், பணியில் ஈடுபட்டு அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், விடுமுறை எடுத்தால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.

பணியில் சேர்ந்தவர்களில் பலர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு வன கல்லூரியில் படித்து உள்ளனர். பின்னர் அவர்கள் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வனச்சரகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி வனச்சரகர்களாக பணி வழங்கப்பட்டு உள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 6 பெண்கள் இடம் பெற்று உள்ளனர்.

நீலகிரியை சேர்ந்த கனிமொழி, கூடலூரை சேர்ந்த பிருந்தா, மசினகுடியை சேர்ந்த மேகலா, கிளன்மார்கனை சேர்ந்த திவ்யா, ஊட்டியை சேர்ந்த சவுமியா, பந்தலூரை சேர்ந்த சந்தியா, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன், பாலமுருகன், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதியமான், மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுரே‌‌ஷ் ரமணன், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித், சந்தோ‌‌ஷ், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வினோபா, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முத்துமணி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதிலங்கம், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜினோபிளசில் ஆகிய 17 பேர் பணியில் சேர்ந்து உள்ளனர். 
Tags:    

Similar News