செய்திகள்
சரவணன்

ஜோலார்பேட்டை அருகே சென்னை வாலிபரை கொன்று கிணற்றில் வீச்சு - நண்பரிடம் விசாரணை

Published On 2019-12-11 10:10 GMT   |   Update On 2019-12-11 10:10 GMT
ஜோலார்பேட்டை அருகே சென்னை வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது நண்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை பொன்னேரி மலையடிவாரத்தில் உள்ள வாணி ஏரி அருகே கிணற்றில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை சைதாபேட்டையை சேர்ந்த வேணுகோபால், அவரது மனைவி நேற்றிரவு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட வாலிபர் தங்களுடைய மகனாக இருக்கலாம் என தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

எங்களுடைய மகன் சரவணன் (22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் விஜய் (23) ஆகியோர் ஜோலார்பேட்டை பகுதியில் கோழி கூண்டு செய்து தரும் பணியை டெண்டர் எடுத்து செய்து வந்தனர். கடந்த 2 வாரங்களாக பொன்னேரி மலையடிவாரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தனர்.

தினமும் சரவணன் எங்களிடம் செல்போனில் பேசி வந்தார். கடந்த புதன் கிழமை முதல் தொடர்பு கொள்ளவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஜோலார்பேட்டையில் கிணற்றில் வாலிபர் பிணம் கிடப்பதாக சமூக வலைதளங்களில் படங்கள் பரவியது. அந்த படம் எங்களுடைய மகன் உருவத்தை ஒத்திருந்தது.

விஜயிடம் சரவணன் எங்கே இருக்கிறார் என்று கேட்டோம். அவர் நான் சென்னைக்கு வந்து விட்டேன். எனக்கு எதுவும் தெரியாது என்று மழுப்பலாக பதில் கூறினார்.

இதனால் சந்தேகமடைந்த நாங்கள் விஜயை பிடித்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றனர்.

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்த பிணத்தை பார்த்த அவர்கள் சரவணன் உடல் தான் என உறுதிப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து போலீசார் விஜயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை சரவணன், விஜய் இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விஜய் சென்னை சென்றுவிட்டார்.

இதனால் விஜய்தான் சரவணனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News