செய்திகள்
வெங்காயம்

வெங்காயம் பதுக்கல் - வேலூர் மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை

Published On 2019-12-10 05:51 GMT   |   Update On 2019-12-10 05:51 GMT
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர்.
வேலூர்:

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெங்காயம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.

வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 டன் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காயம் விற்பனைக்கு வந்தது.

சில வாரங்களாக 20 டன் அளவில்தான் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக 1 கிலோ ரூ.200 வரை விற்பனையாகி அனைத்து தரப்பு மக்களையும் சிரமத்துக்குள்ளாக்கியது. பெரும்பாலான ஓட்டல்களில் வெங்காயம் சேர்க்காமல் மாற்று உணவுகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர்.

வெங்காயம் வரத்து மற்றும் விலை நிர்ணயம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து வேலூர் மார்க்கெட்டில் வெங்காயம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் 50 கிலோ மூட்டை ரூ.8500க்கு விற்பனையானது. நேற்று ரூ.1000 குறைந்து ரூ.7500க்கு விற்பனையானது. இதனால் நேற்று கிலோ ரூ.160க்கு விற்பனை செய்தனர்.

இன்று காலை வெங்காய மூட்டை மேலும் ரூ.1500 முதல் ரூ.2500 வரை குறைந்தது. முதல் தரம் மூட்டை ரூ.6 ஆயிரத்துக்கும், நடுத்தரம் ரூ.5 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இதனால் 1 கிலோ வெங்காயம் தரம் அடிப்படையில் ரூ.100, ரூ.120, ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் கூறுகையில்:-

கடந்த சில வாரங்களாக முன்பு வந்ததை விட 4ல் ஒரு பங்குதான் வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவே இந்த திடீர் விலை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளது.

மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை பாதிப்பால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 2020ம் ஆண்டு பொங்கலுக்கு பிறகு புதுசரக்கு வந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது.

மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கி வைக்கவில்லை. அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். வெங்காயம் பதுக்கி வைத்தால் எடை குறையும். மேலும் அழுகிவிடும். இதனால் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும்.

தற்போது வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விலை குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News