செய்திகள்
சுப்பிரமணியசாமி

பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை- சுப்பிரமணியசாமி பேட்டி

Published On 2019-12-08 10:18 GMT   |   Update On 2019-12-08 10:18 GMT
பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அரசியல் சட்டத்தின் 100 விதியின்படி தன்னை பாதுகாக்க ஒருவர் மற்றொரு உயிரை எடுக்கலாம். இதை சாதாரண மனிதனும் செய்யலாம், போலீசும் செய்யலாம். தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவ மாணவி கொலை சம்பந்தமாக 4 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

போலீசார் அந்த நாலு பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று அவர்கள் போலீசாரை நோக்கி சுட்டதால் தற்காப்புக்காக பதிலுக்கு சுட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முழுமையான விசாரணைக்கு பின்பு தான் சொல்ல முடியும்.

நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. இது நம்முடைய தோல்வி. இதற்கு காரணம் நம்மிடத்தில் சரியான பொருளாதார கொள்கை இல்லை. மக்கள் கையில் பணம் இல்லை. மக்கள் கையில் பணம் போக வேண்டுமென்றால் வருமான வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

அப்பொழுதுதான் பொருளாதாரம் சரியாக மாறும். வெங்காய விலை ஏற்றம் பற்றி சென்னைக்கு அடிக்கடி வரும் நிர்மலா சீதாராமனிடம் கேட்க வேண்டும்.

நான் எழுதி இருக்கிற ஒரு புத்தகத்தில் இதை குறித்து எழுதி இருக்கிறேன். மேலும் பிரதம மந்திரிக்கு தனியாக 6 கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.


பிரதம மந்திரிக்கு பொருளாதாரம் புரியவேண்டும், அவருக்கு பொருளாதாரம் தெரியாது. பொருளாதாரம் மாற்றம் வந்தால் தான் இது எல்லாம் சரியாகும்.

சசிகலாவை பொறுத்த வரை அ.தி.மு.க.வில் இணைவாரா என்று தெரியவில்லை. அவருக்கு திறமை உண்டு. அவர் தண்டனை முடிந்து வெளியே வரும் போது அரசியலில் ஒரு வாய்ப்பு உண்டு.


ப.சிதம்பரம் ஒரு குற்றவாளி. 100 நாட்களுக்கு மேலே ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர். அவர் பேச்சை கவனிக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News