செய்திகள்
அடித்தளமிடும் பணிக்கு தேவையான பொருட்களை கிரேன் மூலம் சுமைதூக்கும் ரெயிலில் ஏற்றியபோது எடுத்தபடம்

திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் வரை மின்சார ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்

Published On 2019-12-07 18:24 GMT   |   Update On 2019-12-07 18:24 GMT
திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் வரை மின்சார ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்:

டெல்டா மாவட்டங்களின் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் பாதையாக திருச்சி-காரைக்கால் ரெயில் பாதை விளங்கி வருகிறது. இந்த வழி தடங்களில் தஞ்சை பெரிய கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில், வேளாங்கண்ணி, நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் இந்த வழியாக கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் திருச்சி- காரைக்கால் இடையே உள்ள ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் மொத்த தூரம் 153 கி.மீட்டர் ஆகும். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகளை இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு செய்து வருகிறது. முதல் கட்டமாக தஞ்சை-திருச்சி இடையே இரு வழிப்பாதையில் 2 வழி தடத்திலும் மின்மயமாக்கல் பணிகள் முடிவு பெற்றுள்ளது. இந்த பாதையில் ஒரு வழிபாதைக்கு தலா 1200 உயர் மின் கம்பம் என 2,400 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக 2-ம் கட்டமாக தஞ்சை- திருவாரூர் இடையே நடைபெற்ற பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து திருவாரூரில் இருந்து நாகைக்கு மின்சார ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மின்கம்பங்கள் நடுவதற்காக அடித்தளமிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதில் திருவாரூரில் இருந்து சிக்கல் வரை மின்கம்பங்கள் நடும் பணி முடிந்து விட்டது. தொடர்ந்து துணை மின்நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெற்றவுடன் சோதனை ஓட்டம் நடைபெறும். சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் திருச்சி- காரைக்கால் வழி தடத்தில் மின்சார ரெயில்கள் சேவை நடைபெறும். இதனால் பயணிகளின் நேரம் மிச்சம் ஆகும். சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும். அதே போல் வேளாங்கண்ணி, நாகூர் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வந்து செல்வோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இதுகுறித்து ரெயில்வே துறை மின்மயமாக்கல் பிரிவுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

திருச்சி-காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக திருச்சி-தஞ்சை இடையே பணிகள் முடிவடைந்துள்ளது. அடுத்தபடியாக தஞ்சை-திருவாரூர் வழித்தடத்தில் துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் திருவாரூர்- நாகை வழி தடத்தில் மின்கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த பகுதியில் துணை மின்நிலையம் அமைப்பதற்கான பணியில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகை ரெயில் நிலையம் அருகே மின்கம்பம் நடுவதற்காக அடித்தளமிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாகை பகுதியில் விவசாய நிலங்கள் அதிகமா இருப்பதால், தளவாட பொருட்களை கொண்டு வந்து வைப்பதற்கு இடம் இல்லை. இதனால் நாகை ரெயில் நிலையத்தில் ஜல்லிக்கல், சிமெண்டு, மண், மின்கம்பம் உள்ளிட்டவற்றை கொண்டு மொத்தமாக வைக்கிறோம். அங்கிருந்து கிரேன் மூலம் சுமைத்தூக்கும் ரெயிலில் கொண்டு செல்கிறோம். 1 கிலோ மீட்டருக்கு 22 என்கிற கணக்கில் மின்கம்பங்கள் நடப்படும். பருவமழைக்காரணமாக மின்கம்பங்கள் நடும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் ஜனவரிக்குள் கரைக்கால் வரை அடித்தளமிடும் பணி முடிக்கப்படும். அதன் பின்னர் துணை மின்நிலையம் அமைக்கும் பணி நடைபெறும் என்றார்.
Tags:    

Similar News