செய்திகள்
சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்.

திருக்கழுக்குன்றத்தில் லாரியில் டீசல், பேட்டரி திருடிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

Published On 2019-12-06 10:34 GMT   |   Update On 2019-12-06 10:34 GMT
திருக்கழுக்குன்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் டீசல், பேட்டரி திருடிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு:

திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் கார்த்திகேயன். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாற்றில் மணல் திருட்டு சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று போலீஸ் நிலையம் அருகே கிரிவல பாதையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

சம்பவத்தன்று இரவு சாதாரண உடையில் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் ஆகியோர் அந்த லாரியில் பேட்டரி, டீசல் திருடுவது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ காட்சி வைரலாக சமுகவலை தளங்களில் பரவி வருகிறது. இது 2.39 நிமிடம் ஓடுகிறது. அந்த வீடியோவில் சப்- இன்ஸ்பெக்டர் டார்ச் லைட்டுடன் லாரி அருகே வருகிறார்.

பின்னர் அவர் அக்கம் பக்கம் யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டு சுற்றி பார்க்கிறார். பின்னர் அவருடன் வந்த வாலிபர் லாரியில் உள்ள பேட்டரியை திருடி அவர்கள் கொண்டு வந்த காரில் வைக்கிறார்கள்.

இதேபோல் ஒரு கேனில் டீசலையும் திருடி வைக்கின்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயனை செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News