செய்திகள்
பாலகிருஷ்ணன்

உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட அ.தி.மு.க. முயற்சி செய்கிறது - பாலகிருஷ்ணன்

Published On 2019-11-27 10:09 GMT   |   Update On 2019-11-27 12:09 GMT
உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட அ.தி.மு.க. முயற்சி செய்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கடலூர்:

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பாலியல் இல்லாத தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் கடலூர் மாவட்டத்திலிருந்து தொடங்கப்பட்டது. நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா ? நடக்காதா என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டின் முதல்வர் தான் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்து நடத்த வேண்டும். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டுகிறார். மேலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்து தேர்தல் நடத்த முடியுமா?. அதிமுக அரசுக்கு  தோல்வி பயம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். மேலும் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. உள்ளாட்சித் தேர்தலிலும் இதுபோன்று நடந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இதனுடைய பாதிப்பு சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்து விடுமோ என்ற பயத்தில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் போன்ற பதவிக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.  

ஆனால் தற்போது இதற்கு மாறாக மறைமுக தேர்தல் தான் நடைபெறும் என இந்த அரசு அறிவித்துள்ளது. இதனைப் பார்க்கும்போது தில்லு முல்லு ஏற்படுத்தி தேர்தல் தடுப்பதுதான் இந்த அரசின் நோக்கமாக தெரிகிறது. இதன் மூலம் தற்போது மறைமுகத் தேர்தல் அறிவித்ததால் அரசின் உதவியோடு யாரேனும் கோர்ட்டுக்கு சென்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கும் என்ற நோக்கத்தில் மாறி மாறி சட்டத்தை இயற்றி வருகின்றனர்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுசீரமைப்பில் குளறுபடி ஏற்படுத்தி உள்ளனர். இட ஒதுக்கீடு சம்பந்தமாக தலைவர்களுக்கு எந்த அறிவிப்பும் அரசு வெளியிடவில்லை. ஆகையால் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போடுவதில் அ.தி.மு.க அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

இவ்வாறு  கூறினார்.
Tags:    

Similar News