செய்திகள்
திட்டக்குடியில் இன்று காலை பலத்த மழைபெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடலூர் மாவட்டத்தில் விடிய,விடிய கொட்டி தீர்த்த கனமழை

Published On 2019-11-22 10:07 GMT   |   Update On 2019-11-22 10:07 GMT
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடலூர்:

வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு அதிகாலை வரை நீடித்தது. அதன் பின்பு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்துகொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

கடலூர் மஞ்சக்குப்பம் திருப்பாதிரிப்புலியூர், திருவந்திபுரம், ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, பாலூர், மேல்பட்டாம்பாக்கம் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது.

கடலூர் நகரில் இன்று காலை 6.30 மணியளவில் காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழையின் தாக்கம் அதிகரித்தது. சுமார் 1 மணிநேரம் மழைகொட்டியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

கடலூர் ரெயில்வே சுரங்கபாதையில் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மாற்று பாதைவழியாக சென்றனர். கடலூர் உழவர் சந்தையிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

கடலூர் பஸ்நிலையம், கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், பத்திரபதிவு அலுவலகம், சன்னதி தெரு, தேரடி வீதி, போன்ற இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கடலூர் நகரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், கடும் அவதி அடைந்தனர், வேலைக்கு செல்வோர் கடும் பாதிப்படைந்தனர். அரசு அலுவலகம் செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

பண்ருட்டி பகுதியிலும் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடம்புலியூர், அண்ணாகிராமம், முத்தாண்டிக்குப்பம், போன்ற பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

சிதம்பரம், கிள்ளை, நெய்வேலி, விருத்தாசலம், வேப்பூர், பெண்ணாடம், முருகன் குடி, இறையூர், கோனூர், பூவனூர் பகுதியில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. பெண்ணாடம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோளம், கம்பு, பருத்தி போன்றவை பயிரிட்டிருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திட்டக்குடி பகுதியிலும் காற்றுடன் இன்று காலை 1 மணிநேரம் மழை கொட்டியது. திட்டக்குடி, ஆவினங்குடி, வாகையூர், ராமநத்தம், தொழுதூர் ஆகிய பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடல் சீற்றம் அதிகம் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடியுடன் மழை கொட்டியது. ஸ்ரீமுஷ்ணம் நகரம், எசனூர், மதகளிமாணிக்கம், குணமங்கலம், இணமங்கலம், புதுக்குப்பம், அந்தோணியார்புரம் போன்ற இடங்களில் நேற்று இரவு 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இன்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News