செய்திகள்
மதுபாட்டில்கள் பறிமுதல்

தரங்கம்பாடி அருகே காரில் கடத்திய 2000 மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2019-11-19 12:17 GMT   |   Update On 2019-11-19 12:17 GMT
தரங்கம்பாடி அருகே காரில் கடத்திய 2000 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தரங்கம்பாடி:

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் சிலர் கடத்தலுக்கு உதவி புரிவதால் மது கடத்தல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நாகை மாவட்டம் நண்டலாறு சோதனை சாவடியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் ராஜீவ்புரம் பகுதியில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்த பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதில் உஷாரான போலீசார் அந்த வழியாக வந்த சொகுசு காரை மடக்கினர். அதிலிருந்து ஒருவர் கீழே குதித்து தப்பி சென்று விட்டார். காரில் இருந்த மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (வயது40) என்பவர் பிடிபட்டார். காரை போலீசார் சோதனை செய்த போது அதில் 40 அட்டை பெட்டிகளில் 2000 குவாட்டர் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

அதனை கடத்தி வந்தது தொடர்பாக கலியபெருமாளை போலீசார் கைது செய்தனர். அவர் கடத்தி வந்த மது பாட்டில்களும், கடத்தலுக்கு பயன் படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

போலீசாரின் விசாரணையில் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News