செய்திகள்
பல்லாவரம் பெரிய ஏரி

பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கடல்போல் காட்சியளித்த பெரிய ஏரியை காணவில்லை

Published On 2019-11-12 08:11 GMT   |   Update On 2019-11-12 08:11 GMT
பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கடல்போல் காட்சியளித்த பெரிய ஏரி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவது சமூக ஆர்வலர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது.
சென்னை:

அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது சென்னை. எனவே நீர் நிலைகளை காப்போம் என்ற கோ‌ஷம் பலமாக கேட்கிறது. அதே வேகத்தில் இருக்கிற நீர் நிலைகளை அழிப்பதும் நடக்கிறது.

பல்லாவரம் பெரிய ஏரி கடல் போல் காட்சியளிக்கும் இந்த ஏரிதான் பல்லாவரம், குரோம்பேட்டை, ஜமீன் பல்லாவரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியின் நீர் ஆதாரமாக இருந்து வந்தது. 26 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருக்கும்.

பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலை திட்டத்துக்காக இந்த ஏரியை முதலில் இரண்டாக பிளந்து ஏரியின் நடுவில் ரோடு உருவானது.

சுமார் 40 வருடங்களாக பல்லாவரம் நகராட்சி குப்பைகளையும் இந்த ஏரியில் கொட்டினார்கள். இதனால் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி மிகப்பெரிய குப்பைமேடாக மாறியது.

அரசு ஒரு பக்கம் இப்படி அதிகாரப்பூர்வமாக ஏரியை ஆக்கிரமித்தது. இன்னொரு பக்கம் பல தனியாரும் ஆக்கிரமித்தார்கள்.

இப்போது மொத்தமே 5 ஏக்கருக்குள் சிறு குட்டை போல் மாறி விட்டது பெரிய ஏரி, இருக்கும் ஏரியை காக்கும் எண்ணம் கூட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வரவில்லை.

இப்போது ரேடியல் சாலையை அகலப்படுத்துவதற்காக மண்ணை கொட்டி மேலும் ஏரியை நிரப்பி சாலையாக மாற்றும் பணிகள் நடக்கிறது.

கீழ்க்கட்டளையில் இருந்து குரோம்பேட்டை வரை ரேடியல் சாலையின் இருபுறமும் பெரிய மரங்கள் நூற்றுக்கணக்கில் நின்றன. கடந்த ஒரு மாதத்தில் அனைத்து மரங்களையும் வெட்டி விட்டனர். இப்போது விமான நிலைய ஓடுபாதை போல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பொட்டல் காடாக காட்சியளிக்கிறது.

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரத்தை நடுங்கள் என்று கோர்ட்டும் அறிவுறுத்தி விட்டது. ஆனால் எதையும் யாரும் கண்டு கொள்வதில்லை.

கண்ணெதிரில் பிரமாண்டமான ஒரு ஏரி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போவது சமூக ஆர்வலர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது.

Tags:    

Similar News