செய்திகள்
கோப்பு படம்

பேரணாம்பட்டில் தோல் வியாபாரி வீட்டில் திருட முயன்ற 2 பேர் கைது

Published On 2019-11-02 10:59 GMT   |   Update On 2019-11-02 10:59 GMT
பேரணாம்பட்டில் தோல் வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் திருட முயன்ற போது பக்கத்து வீட்டுகாரர் போலீசுக்கு தகவல் கூறியதால் 2 பேர் பிடிப்பட்டனர்.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு டவுன் அஷ்ரப்வீதியை சேர்ந்தவர் உசேமா (வத 34). தோல் வியாபாரி இவர் நேற்று முன் தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் பேரணாம்பட்டு டவுனிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார்.

நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கதவை உடைத்து கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள். உடனடியாக பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக பேரணாம் பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் போலீஸ் ஏட்டு மகாபிரசாத் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மர்ம நபர்கள் 2 பேரும் வீட்டின் கீழ் தளத்தில் திருட முயன்ற போது ஏதும் கிடைக்காததால் வீட்டின் மாடியிலுள்ள பகுதிக்கு சென்று அங்கு கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவிலிருந்த லேப்-டாப்பை திருட முயன்ற போது அறையின் வெளியிலில் போலீசார் நிற்பதை கண்டனர். அதில் ஒருவன் வெளியே குதித்து தப்பியோடினான்.

போலீசார் விடாமல் துரத்தி சென்று மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் வாணியம்பாடி டவுன் சென்னாம்பேட்டையிலுள்ள கோட்டை தெருவை சேர்ந்த அஸ்கர்அலி (23), அதே பகுதியை சேர்ந்த அஸ்ஷூ (24) என்பது தெரியவந்தது.

இருவரும் வாணியம்பாடி மற்றும் பல்வேறு ஊர்களில் திருட்டுசம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்ததால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 5 தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியில் வந்தனர்.

இவர்களிடமிருந்து திருட பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடு கைப்பற்றப்பட்டது. அஸ்கர்அலி, அஸ்ஷூ இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பேரணாம்பட்டு நகர் முழுவதும் முக்கிய 12 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு சமூக விரோத குற்ற செயல்கள் நடக்காதவாறு தினமும் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஆதலால் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் செல்லும் போது போலீஸ் நிலையத்திற்கு அவசியம் தகவல் தெரிவிக்கும்படியும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News