செய்திகள்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவாயிலில் கார், பைக் சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்

பிரதமர் மோடி- சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் வாகனங்கள் சோதனை தீவிரம்

Published On 2019-09-28 13:25 IST   |   Update On 2019-09-28 13:25:00 IST
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையொட்டி மாமல்லபுரம் உள்ளே நுழையும் அனைத்து பைக், கார்களும் போலீசாரின் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது.
மாமல்லபுரம்:

பிரதமர் மோடியும் சீன அதிபரும் அடுத்த மாதம் 12,13 தேதிகளில் மாமல்லபுரம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில் பயணிக்க இருக்கும் அனைத்து சாலைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவளம், திருவிடந்தை, மாமல்லபுரம் வரை உள்ள 3 மற்றும் 5 நட்சத்திர அந்தஸ்துடைய அனைத்து ஓட்டல்களுக்குள் நுழையும் கார் மற்றும் பைக்குகளை ஓட்டல் காவலர்கள் நவீன கருவிகள் வைத்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருக்கிறதா என சோதனையிட்டு உள்ளே அனுப்பி வருகிறார்கள்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சவுக்கு காட்டுப்பகுதி மற்றும் கடலோர பகுதிகளை கடலோரப்பாதுகாப்பு படையினர் இரவு நேரங்களில் நவீன தொலைஒளி விளக்குகள் வசதியுடன் மணல் ஜீப்பில் சென்று புதிய நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா எவரேனும் பதுங்கி இருக்கிறார்களா என கண்காணித்து வருகிறார்கள்.

மாமல்லபுரம், பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் புறவழிச்சாலை வழியாக மாமல்லபுரம் உள்ளே நுழையும் அனைத்து பைக், கார்களும் போலீசாரின் சோதனைக்கு பின்னர் சுயவிபரங்களை கூறி ஆதாரங்களை காண்பித்து பதிவு செய்த பின்னரே வாகனங்கள் உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது.

Similar News