செய்திகள்
பார்சல் லாரி மற்றும் அதில் உள்ள பொருட்கள்.

வேலூர் அருகே பார்சல் லாரியில் இருந்த ஒரு லட்சம் பொருட்கள் கொள்ளை

Published On 2019-09-25 11:25 GMT   |   Update On 2019-09-25 11:25 GMT
வேலூர் அருகே பார்சல் லாரியில் இருந்த ஒரு லட்சம் பொருட்களை கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (வயது 38). சென்னையில் உள்ள பார்சல் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சென்னையில் இருந்து பார்சல் ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி புறப்பட்டு வந்தார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பூஞ்சோலை என்ற இடத்தில் வந்தபோது அவருக்கு களைப்பு ஏற்பட்டது.

இதனால் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் பார்சல் லாரியில் பின்பக்க கதவை உடைத்து பொருட்களை மற்றொரு லாரியில் ஏற்றினர். அதில் இருந்த துணி பெயிண்ட் உள்பட சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை அவர்கள் ஏற்றி முடித்தனர்.

அப்போது சத்தம் கேட்டு ஜம்புலிங்கம் கண்விழித்தார். இதனால் சுதாரித்துக்கொண்ட கும்பல் லாரியில் தப்பிச்சென்றனர். அவர்களை ஜம்புலிங்கம் அவரது லாரியில் விரட்டிச் சென்றார்.

ரத்தனகிரி கோவில் அருகே உள்ள சப்வே வழியாக திருட்டு கும்பல் புகுந்து சென்னை நோக்கி சென்றனர்.

ஜம்புலிங்கம் அவரை பின் தொடர்ந்து சென்றார். வேப்பூர் என்ற இடத்தில் சென்றபோது கும்பல் லாரியை நிறுத்தினர். ஜம்புலிங்கம் லாரியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓடிவந்தார். கும்பல் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு பொருட்களுடன் தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து ஜம்புலிங்கம் ரத்தனகிரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News