செய்திகள்
வேலூரில் ராணுவ வீரர் மனைவி தற்கொலை
குழந்தை பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கி தராததால் ராணுவ வீரர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வித்யா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காஷ்மீரிலிருந்து விஜயகுமார் விடுமுறையில் பூங்குளத்திற்கு வந்தார். விஜயகுமார் மகள் தர்ஷினிக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அவருடைய மனைவி வித்யா குழந்தைக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த வித்யா நேற்று இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை வித்யா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் இதுகுறித்து ஆலங்காயம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வித்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வித்யாவின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.