செய்திகள்
ஆம்பூர் அகதிகள் முகாமில் தாயை எரித்து கொன்ற மகன் கைது
ஆம்பூர் அகதிகள் முகாமில் குடும்ப தகராறில் தாயை எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:
சேலம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் காலிங்கன். இவரது மனைவி லட்சுமி (வயது50). உடல்நிலை பாதிப்பின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
லட்சுமி ஆம்பூர் அகதிகள் முகாமில் வசிக்கும் அவரது மகன் கருணாகரணை பார்ப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி புறப்பட்டு வந்தார். ஆகஸ்டு 23-ந்தேதி லட்சுமிக்கும் அவரது மகன் கருணாகரனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருணாகரன் வீட்டில் இருந்த மண்ணென்ணையை தாயின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் லட்சுமி உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அப்போது கருணாகரனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லட்சுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் வேலூர் ஜே.எம்.-4 நீதிபதி லட்சுமியிடம் வாக்குமூலம் பெற்றார். அப்போது குடும்பதகராறு காரணமாக தனது மகனே தன் மீது மண்ணென்ணை ஊற்றி தீ வைத்ததாக வாக்கு மூலம் அளித்தார். அவரது உடல் நிலை மோசடைந்து லட்சுமி அன்றே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீக்காயம் அடைந்த கருணாகரன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கருணாகரனை உமராபாத் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.