செய்திகள்
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்

பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரம் ஓட்டல்களில் போலீசார் கண்காணிப்பு

Published On 2019-09-23 07:30 GMT   |   Update On 2019-09-23 07:30 GMT
பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் ஓட்டல்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

மாமல்லபுரம்:

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிங்பிங்கும் அடுத்த மாதம் 11-ந் தேதி மாமல்லபுரம் வருகிறார்கள்.

தலைவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் திருவிடந்தை ஹெலிபேடு, அவர்கள் தங்க இருக்கும் கோவளம் நட்சத்திர ஓட்டல், சுற்றிப் பார்க்க இருக்கும் மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பகுதிகள் மூன்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இருப்பதால் பாதுகாப்பு முன் ஏற்பாடாக முக்கிய இணைப்பு சாலைகளான கோவளம், மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம் பகுதிகளில் தற்போது இரவு பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்காக வெளியூர், வெளி மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

சந்தேகத்துக்கு இடமான கார்கள் வந்தால் நிறுத்தி சோதனை செய்யவும், வண்டிகள் நிற்காமல் சென்றால் அடுத்த சோதனை சாவடிக்கு தகவல் கொடுக்கவும் போலீசாரும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் போலீசார் அமர்ந்திருக்கும் பகுதி மற்றும் சோதனையில் ஈடுபடும் காட்சிகளை பதிவு செய்யவும் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்க்கவும் நவீன கண்காணிப்பு சுழல் கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலைப்பகுதியில் உள்ள ஒரு சில ஓட்டல்களில் இன்னும் கேமராக்கள் பொருத்தாமல் இருப்பதும் போலீசாருக்கு பயந்து சில ஓட்டல்களில் வேலை செய்யாத கேமராக்களை பொருத்தி வைத்திருப்பதும் மாமல்லபுரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனுக்கு தெரியவந்தது. இதையடுத்து மாமல்லபுரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் போலீசார் ஆய்வு செய்து சோதனை நடத்தி வருகிறார்கள். கேமராக்கள் பொருத்தவும் அறிவுறுத்தி உள்ளனர்.

தலைவர்கள் வருகையையொட்டி கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் பகுதிகளில் பல ஆண்டுகளாக பச்சைக்கலரில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலிகளுக்கு தற்போது மத்திய தொல்லியல் துறை ஊழியர்கள் அவசர அவசரமாக சிற்பங்கள் கலரில் பெயிண்ட் அடிக்கப்படுகிறது.

Tags:    

Similar News