செய்திகள்
விளம்பர பேனரை கிழித்த போலீஸ்காரர்

விளம்பர பேனரை கிழித்து எறிந்த போலீஸ்காரர்- சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ

Published On 2019-09-20 10:11 GMT   |   Update On 2019-09-20 10:11 GMT
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்ததால் ஆதங்கம் அடைந்த போலீஸ்காரர், விளம்பர பேனரை கிழித்து எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தாம்பரம்:

பள்ளிக்கரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் சரிந்து மொபட்டில் சென்ற பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதில் நிலைதடுமாறி விழுந்த சுபஸ்ரீயின் மீது லாரி ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசியல் கட்சியினரின் பேனர் கலாச்சாரத்துக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தது. இதேபோல் பேனர் வைப்பதில்லை என்று அரசியல் கட்சியினரும் அறிவித்து உள்ளனர்.

இதைத் தொடர்ந்து அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்டு உள்ள பேனர்கள் மற்றும் விளம்பர போர்டுகளை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த விளம்பர பேனரை பார்த்ததும் போலீஸ்காரர் ஒருவர் ஆவேசத்தில் கிழித்து எறியும் வீடியோ காட்சி தற்போது சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கதிரவன். இவர் இரவு பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்தார்.



அப்போது சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர போர்டு மற்றும் பேனரை கண்டு கடும் ஆத்திரம் அடைந்தார். ஆவேசம் அடைந்த அவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்த விளம்பர பலகையை கம்பியுடன் பிடுங்கி எறிந்தார்.

பின்னர் அங்கிருந்த மற்றொரு விளம்பர பேனரை கிழித்தார். இதனை கண்டு அவ்வழியே சென்ற இளைஞர்கள் அங்கு திரண்டனர். அவர்களும் போலீஸ்காரர் கதிரவனுடன் சேர்ந்து பேனரை கிழித்து வீசினர்.

இந்த காட்சிகளை வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளார். பேனரை கிழித்து எறிந்த போலீஸ்காரர் கதிரவனை பொதுமக்கள் பாராட்டினர்.

அப்போது போலீஸ்காரர் கதிரவன் கூறும்போது, ‘‘சமீபத்தில் பேனரால் பலியான சுபஸ்ரீயின் உயிரிழப்பு என்னை மிகவும் பாதித்தது. அதனால் தான் இப்படி பேனரை அகற்றினேன்’’ என்றார்.
Tags:    

Similar News