செய்திகள்
கேஎஸ் அழகிரி

நாட்டின் ஒற்றுமையை கெடுக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது - கே.எஸ்.அழகிரி

Published On 2019-09-16 05:35 GMT   |   Update On 2019-09-16 05:35 GMT
நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான நிலையை உருவாக்கவே பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
ஆலந்தூர்:

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

பலமொழிகள் பேசும் மக்களை கொண்ட நமது தேசம், பல்வேறு கலாசாரங்களை கொண்டிருந்தாலும் ஒரே தேசம் என்ற பெருமை கொண்டது. இதில் ஒரு மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று கூறுவது எதிர்மறையான நிலையை உருவாக்கும்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கையான ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை மக்களிடம் புகுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. அதைத்தான் அமித்ஷா கூறி இருக்கிறார். நாடு சுதந்திரம் பெறுவதில் காந்தியிடம் தோற்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அதன் கொள்கை இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.

120 கோடி மக்களை கொண்ட நாட்டில் மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசுவது எப்படி சாத்தியம்? பரவலாக இந்தி பேசலாம். எல்லோரும் எப்படி ஒரே மொழியை பேச முடியும்? ஒரு மொழியை விரும்பி படிக்கலாம். திணிக்க முயன்றால் எதிர்ப்புதான் வரும்.

நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான நிலையை உருவாக்கவே பா.ஜனதா முயற்சி செய்கிறது. எல்லா மொழியும், மதமும் மதிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் காந்தியும், நேருவும், காமராஜரும் விரும்பினார்கள். அதை சீர்குலைக்க திட்டமிடுகிறார்கள்.

வங்கமொழியை மதிக்காமல் பஞ்சாப் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான், பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சென்றது. பா.ஜனதாவும் அமித்ஷாவும் இதை புரிந்துகொள்ள வேண்டும் மக்களை அடிமைகளாக நடத்த முயற்சிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News