செய்திகள்
கைது

ஆதம்பாக்கத்தில் காரில் சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட டிரைவர் கைது

Published On 2019-09-14 10:27 GMT   |   Update On 2019-09-14 10:27 GMT
ஆதம்பாக்கத்தில் காரில் சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரை சேர்ந்தவர் புஷ்பா (72).

சம்பவத்தன்று அதிகாலை இவர் வீடு அருகே நடந்து சென்றார். அவ்வழியாக காரில் வந்த மர்ம நபர் ஒருவர் புஷ்பா அருகே காரை நிறுத்தி அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

இதேபோல் நங்கநல்லூர் பகுதியிலும் ஒரு மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது. அங்குள்ள 22-வது தெருவில் மாலதி (62) என்பவர் வீட்டு வளாகத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த நபர் காரை வீட்டு முன்பு நிறுத்தினார். பின்னர் அந்த நபர் முகவரி கேட்பது போல நடித்து மாலதி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இந்த இரு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

நேற்று இரவு ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் ராம் நகர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒருவர் காரில் ஏறி தப்பி ஓடினார். சந்தேகமடைந்த போலீசார் ஜீப்பில் அவரை துரத்தினர். சினிமா பாணியில் ‘சேசிங்’ செய்த போலீசார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் காரை மடக்கினர்.

பின்னர் காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அயனாவரத்தைச் சேர்ந்த பாலாஜி (50) என்பது தெரிய வந்தது. இவர் 2 மூதாட்டிகளிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவராக பணியாற்றி வந்த இவர் கல்லூரி படிக்கும் தனது 2 மகள்களின் கல்விச் செலவுக்காக நகை பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags:    

Similar News