செய்திகள்
திருமாவளவன்

தமிழிசைக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஆளுநர் பதவி - திருமாவளவன்

Published On 2019-09-09 06:58 GMT   |   Update On 2019-09-09 06:58 GMT
தமிழிசை அரசியல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் ஓய்வு கொடுக்கும் வகையிலேயே ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி காவி மயமாவதை இந்த சம்பவம் உறுதிபடுத்துகிறது. இதுபோன்ற‌ கேள்வி கேட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடப்புத்தகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வினா எழுப்பும்படியான பாடத்திட்டத்தை நீக்க வேண்டும்.

தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்ற தமிழிசைக்கு வாழ்த்துக்கள். பா.ஜ.க. தலைமை தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலேயே ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை. துடிப்புடன் செயல்படும் தமிழிசைக்கு அரசியலில் இன்னும் செயல் பட மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வழங்கி இருக்கலாம்.



ராம்ஜெத்மலானியின் இழப்பு அரசியல் மற்றும் சட்டத்துறைக்கு பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயண முடித்துக்கொண்டு திரும்பி வந்து அவர் தொழிலில் முதலீடு எவ்வாறு பெற்று உள்ளார் என்ற அறிக்கையை பொறுத்தே அது குறித்து விமர்சனம் செய்ய முடியும்.

சிதம்பரத்தை போன்று ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறிவருவது, அது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாது. இஸ்ரோ விஞ்ஞானிகள் படைத்திருப்பது மிகப்பெரிய சாதனைதான். சந்திரயான்-2 பின்னடைவு சந்திப்பதற்காக விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை தொடர்ந்து முயற்சிகளை விஞ்ஞானிகள் செய்யவேண்டும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News