செய்திகள்
பரங்கிக்காய்களை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றிய போது எடுத்த படம்.

பரங்கிக்காய்களின் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

Published On 2019-08-26 18:06 GMT   |   Update On 2019-08-26 18:06 GMT
குன்னம் பகுதியில் விளைந்துள்ள பரங்கிக்காய்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குன்னம்:

குன்னம் மற்றும் மருவத்தூர் கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கத்தரி, வெண்டை, பாகல், புடலை, பூசணி, பரங்கிக்காய் உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர். சித்தளி, பேரளி, கவுள்பாளையம், குன்னம், வரகூர், அருமடல், பில்வாடி, சிறுகுடல், செங்குணம் உள்ளிட்ட பகுதியில் வருடா வருடம் பல ஏக்கர் நிலப்பரப்பளவில் பரங்கிக்காய் பயிர் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குன்னம், மருவத்தூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பரங்கிக்காய்கள் சேகரிக்கப்பட்டு விற்பனைக்காக திருச்சி, நாகர்கோவில், சென்னை, திருநெல்வேலி, மதுரை ஆகிய ஊர்களுக்கு லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் மழை பொய்த்து போனதால் பரங்கிக்காய்களின் வளர்ச்சி குறைந்து சிறுத்து காணப்பட்டதால், விலை வீழ்ச்சி ஏற்பட்டு கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.2 முதல் 4 வரையே மொத்த விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பரங்கிக்காய்களை வாங்க வியாபாரிகள் பலர் முன்வரவில்லை.

இதுகுறித்து பேரளியை சேர்ந்த விவசாயி ராமசாமி கூறியதாவது:-

குன்னம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பரங்கிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டு பரங்கிக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறோம். பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். நோய் எதிர்ப்பு சக்திமிக்கதாக உள்ளதால், பரங்கிக்காயை மக்கள் விரும்பி உண்கின்றனர். 60 நாள் பயிரான பரங்கிக்காயை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். ஏக்கருக்கு சாகுபடி செலவு ரூ.15 ஆயிரம் ஆகும்.

இந்த ஆண்டு மழை பொய்த்து போனதால் பரங்கிக்காயின் அளவு பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவிலேயே உள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து தற்போது ஒரு கிலோ ரூ.3-க்கு விற்கப்படுகிறது. அப்படி விற்றாலும் பரங்கிக்காய்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. மேலும் பராமரிப்பு செய்த செலவுக்கு கூட காய் விற்கவில்லை. சரியான வளர்ச்சி இல்லாமல் மிகவும் சிறிய அளவில் உள்ள பரங்கிக்காய்களை மாட்டிற்கு உணவாகக்கொடுக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News