செய்திகள்
கைது செய்யப்பட்ட கொலையாளிகள்

பணத்துக்காக ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரை நண்பர்களே கொன்ற கொடூரம்

Published On 2019-08-22 10:16 GMT   |   Update On 2019-08-22 10:16 GMT
சென்னிமலை அருகே பணத்துக்காக ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டரை நண்பர்களே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னிமலை:

சென்னிமலை அடுத்துள்ள காளிக்காவலசு பகுதியினை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 60). இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருக்கும் இவரது மனைவி முத்துலட்சுமிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பழனிசாமி 1010 நெசவாளர் காலனிப் பகுதியில் வசித்து வந்தார்.

இவர் கடந்த 13-ம் தேதி காலை வீட்டினுள்ளே கைகள் பின்புறமாக கயிற்றின் மூலம் கட்டப்பட்ட நிலையிலும், வாயைத்துணியைக் கொண்டு மூடி வைத்த நிலையிலும் ரத்த வெள்ளத்தில் கொலையாகி கிடந்தார்.

இதை தொடர்ந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். செல்போன் உதவியுடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட ஒருவன் தலைமறைவாகி விட்டான்.

இந்த கொலை பற்றி போலீசார் விசாரணையில் திடுக்தகவல் கிடைத்து உள்ளது.

தனியாக வசித்து வந்த பஸ் கண்டக்டர் பழனிசாமியிடம் அதிக பணம் இருப்பதை அவரது நண்பர்கள் பார்த்து அதனை அபகரிக்க திட்டமிட்டனர்.

அதன்படி கொலை நடந்த அன்று பழனிசாமியின் நண்பர்கள் சென்னிமலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுச்சாமி (46), சென்னிமலை அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் பாலாஜி, மேலும் புளியம்பட்டியை சேர்ந்த பூபதி, சிவன்மலை பகுதியை சேர்ந்த மகேந்திரன், மதுரையை சேர்ந்த முத்துகுமார் ஆகிய 5 பேரும் பழனிசாமி வீட்டுக்கு வந்தனர்.

அங்கு பழனிசாமியுடன் சேர்ந்து 6 பேரும் மது குடித்துள்ளனர். பழனிசாமி தூங்கிய சமயத்தில் நண்பர்கள் 5 பேரும் எழுந்து பீரோவை திறந்து பணம் உள்ளதா என பார்த்தனர்.

அப்போது அங்கு பணம் ஏதும் இல்லை. அதே சமயம் பழனிசாமி திடீரென முழித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த 5 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர். அவரது வாயில் துணியால் அமுக்கி கழுத்தை நெரித்தனர். இதில் பழனிசாமி பரிதாபமாக இறந்தார்.

மது போதையில் பணத்துக்காக நண்பரையே கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் திறமையாக செயல்பட்டு கொலையாளிகள் ஆறுச்சாமி, பாலாஜி, பூபதி, மகேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முத்தூர் குமாரை விரைவில் பிடித்து விடுவோம் என கூறினர். 

Tags:    

Similar News