செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்தப்படம்.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர் பேச்சு

Published On 2019-08-21 10:59 GMT   |   Update On 2019-08-21 10:59 GMT
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள் தான் என்று ஈரோடு மகளிர் கல்லூரி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

ஈரோடு:

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் இன்று வேளாளர் கல்வி அறக்கட்டளை பொன்விழா நடந்தது. விழாவுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசினார்.

மாவட்ட கலெக்டர் கதிரவன் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சரியாக இன்று காலை 10.30 மணிக்கு கல்லூரிக்கு வந்த அவரை கல்லூரி நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்க்கப்பட்டார்.

தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் மேடைக்கு சென்றார்.


கல்லூரியின் பொன் விழா கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசினார்.

இந்த கல்லூரி பொன் விழாவில் பங்கேற்பதில்பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு மாணவிகள் நிறைந்து உள்ளனர்.

பெண்கள் கல்வி கற்க கூடாது என அந்த காலத்தில் பெண்கள் படிக்க கடும் எதிர்ப்பு இருந்தது. அப்படிப்பட்ட அந்த காலத்தில் கமலா சத்தியநாதன் என்ற பெண் இந்த தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து 1901-ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றார். இதன் மூலம் முதல் முதுகலைப்பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

அதன் பிறகு பெண்கள் வாழ்வுக்கு அரும்பாடுபட்டார். பெண்களுக்காகவே பத்திரிக்கையை தொடங்கினார். பத்திரிக்கை தொடங்கிய முதல் பெண்மணி இவர் தான். இவரது வாழ்க்கையை முன் உதாரணமாக கொண்டு இங்குள்ள மாணவிகள் வாழ்வில் முன்னேற வேண்டும். நீங்கள் படிக்கும் கல்லூரி நிறுவனத்துக்கும் இந்த நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இந்த அரசு கல்வி வளர்ச்சிக்கு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. உங்கள் கவனம் முழுவதும் படிப்பில் இருக்க வேண்டும். உங்களை எண்ணி உங்கள் பெற்றோர்கள் கனவு கண்டு இருப்பார்கள். அந்த கனவை நனவாக்க மாணவிகளாகிய நீங்கள் பாடுபட வேண்டும். சமுதாய பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

மாணவிகளாகிய உங்கள் கவனம் படிப்பில் மட்டும் இருக்க வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சி பெண்களின் கல்வியை சேர்ந்து தான் உள்ளது. டீன் ஏஜ் பருவம் என்பது அலை பாயும் பருவம். அந்த பருவத்தில் சிறப்பாக படித்து முன்னேற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள் தான்.

தமிழகத்தில் உயர்கல்வி படித்தோர் சதவீதம் 2011-ம் ஆண்டு 32 சதவீதமாக இருந்தது. முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஏராளமான கல்வி திட்டங்களை தீட்டினார். அவரது வழியில் நாங்களும் கல்விக்கு பல திட்டங்கள் தீட்டி தற்போது தமிழகத்தில் உயர்கல்வி பெற்றோர் சதவீதம் 48,6 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மேலும் பலதிட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

இவ்வாறு முதல-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், அன்பழகன், தங்கமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், கே.விராமலிங்கம், கே.எஸ். தென்னரசு, ராஜாகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News