செய்திகள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-08-17 18:05 GMT   |   Update On 2019-08-17 18:05 GMT
மங்களமேடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மங்களமேடு:

மங்களமேடு அருகே உள்ள வடக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அரசமங்களம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் வரவில்லை. இதையடுத்து ஊராட்சி சார்பில் வாரத்திற்கு ஒரு முறை டிராக்டர் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்துவரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை பழைய அரசமங்களம் கிராமத்தில் வேப்பூரில் இருந்து லப்பைக்குடிக்காடு செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தினமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் வேப்பூர்- லப்பைக்குடிக்காடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News