செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் கயிறு கட்டி வர தடை- மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Published On 2019-08-16 08:46 GMT   |   Update On 2019-08-16 08:46 GMT
மாணவர்கள் சாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறு கட்டி வர தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலத்தில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அனைத்து பாசனத்துக்கும் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். அவரும் மேட்டூர் அணையை தன் கைகளால் திறந்து வைத்தார். டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கோபி பகுதியில் உள்ள தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. குண்டேரிபள்ளம் அணை திறக்கப்பட்டது. அதே போல் இன்று முதல்வர் உத்தரவுபடி கீழ் பவானி பிரதான வாய்க்கால் பாசனத்துக்கு பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து உள்ளேன். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவர்.

இந்த ஆட்சியில் நன்றாக மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இயற்கையே இந்த ஆட்சியை வாழ்த்தி வருகிறது. முதல்வர் தொடங்கி வைத்த குடிமராமத்து பணிகள் மழை நீர் விணாகாமல் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி மாணவர்கள் கைகளில் சாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறு கட்டி கொண்டும் மேலும் நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்து வர சொல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே? என ஒரு நிருபர் கேட்டதற்கு அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

“ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பழைய முறையே நடைமுறையில் உள்ளது. நாங்கள் யாரையும் எதற்காகவும் நிர்பந்திக்கவில்லை. இது சம்பந்தமாக பள்ளி கல்விதுறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் மேற்கொண்டு பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்த வேண்டாம்” என்று கூறினார்.
Tags:    

Similar News