செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-08-10 11:18 GMT   |   Update On 2019-08-10 11:18 GMT
அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 150 பள்ளிகளில் உள்ள 21 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 500 ஆசிரியர்கள் கணித பாடத்தை புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி மூலமாக எளிய முறையில் கற்றுத் தருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் கணித மேதை ராமானுஜம் பிறந்த ஊராகும். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக தமிழ்நாட்டில் கோபியில் இச்செயலி துவங்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 பாடத்தில் கணித பாடப்பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட என்ஜினியரிங் படிக்கும் போது கணித பாடத்தில் 21 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறாத நிலை உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர்க்கும் பொருட்டு கணிதப் பாடத்தை ஆரம்ப கல்வி முதல் எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனத்தின் சார்பில் இச்செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் 45 லட்சத்து 72 ஆயிரம் இலவச மடிகணிணிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 11, 12-ம் வகுப்பு படிக்கும் போதே தற்போது மடிகணிணிகள் வழங்கப்படுகின்றன. 2017- 2018 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிகணிணி விரைவில் வழங்கப்படும்.

6 முதல் 8 ம் வரையிலான 20 லட்சம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டேப் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு வசதியாக 2 ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் தேர்ந்தெடுத்து சாப்ட்வேர் மூலமாக டவுன்லோடு செய்து தரப்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மாணவ, மாணவிகள் க்யூஆர் கோடு மூலமாக படிக்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வு நேரத்திலும் பாடத்தைப் படிக்க முடியும்.

இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். தற்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கூடுதலாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

முதலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். பின்னர் படிப்படியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும். அடல் டிங்கர் லேப் திட்டம் ஒருபள்ளிக்கு ரூ.20 லட்சம் செலவில் விரைவில் துவங்கப்பட உள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களிடையே சீனா தொழில்நுட்பம் முறையில் விமானத்தைக் கூட உருவாக்கும் ஆற்றலும், திறமையும் கற்றுத் தரப்படும் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News