செய்திகள்
கைது

பல்லாவரத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல லட்சம் மோசடி- ஏஜெண்ட் கைது

Published On 2019-07-27 09:06 GMT   |   Update On 2019-07-27 09:06 GMT
பல்லாவரத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த பல்லாவரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருபவர் முகமது பைசல் (40). இவர் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியாக செயல்பட்டு வந்தார்.

ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இது போன்ற ஏஜென்சி உதவியுடன் முன்பதிவு செய்வது வழக்கம். ஐ.ஆர்.டி.சி.யின் இணைய தள முகவரியில் தான் ரெயில்வே ஏஜென்சிகள் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் முகமது பைசல் அவ்வாறு செய்யாமல் சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட இணைய தள முகவரிகளை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு முன்பதிவு டிக்கெட் பெற்று அதிக விலைக்கு விற்று வந்துள்ளார்.

அவசர தேவையை பொறுத்து பல மடங்கு அதிக விலைக்கு டிக்கெட்டுகளை முறைகேடாக விற்பனை செய்து வந்த தகவல் பரங்கிமலை ரெயில்வே போலீசாருக்கு தெரியவந்தது. ரெயில்வே இன்ஸ்பெக்டர் வீரேந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தனபால் ஆகியோர் முகமதுபைசல் அலுவலகத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் அவர் முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்து ஐ.ஆர்.சி.டி.சி.க்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்தது. போலி இ-மெயில் முகவரி மூலம் முறைகேடு செய்த முகமதுபைசலை கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இந்த சோதனையின் போது அவரிடம் இருந்து லேப்டாப், 20 ஆயிரம் மதிப்புள்ள தக்கல் டிக்கெட்டுகள், சாப்ட்வேர் பிரிண்டர், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News