செய்திகள்
தமிழக அரசு

அத்திவரதர் உற்சவத்தில் அன்னதானம் செய்ய பொதுமக்கள் நிதி அளிக்கலாம்- தமிழக அரசு வேண்டுகோள்

Published On 2019-07-24 13:57 IST   |   Update On 2019-07-24 14:00:00 IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய முன்வருவோர் நன்கொடை அளிக்கலாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

சாதாரண நாட்களில் சுமார் 1½ லட்சம் பேரும், விடுமுறை நாட்களில் 2½ லட்சம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கோவிலில் கூடுதல் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.



இதற்கிடையே நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்தி வரதரை தரிசனம் செய்தார். அப்போது வரிசையில் காத்திருந்த பக்தர்களிடம் கோவிலில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய முன்வருவோர் நன்கொடை அளிக்கலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய முன்வருவோர் ‘தேவராஜ சுவாமி திருக்கோயில் காஞ்சிபுரம்’ என்ற முகவரிக்கு பணமாகவோ, காசோலையாகவோ அனுப்பலாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News