செய்திகள்
சென்னைக்கு இன்று 2வது ரெயிலில் குடிநீர் கொண்டு சென்ற காட்சி

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2-வது குடிநீர் ரெயில் இன்று புறப்பட்டது

Published On 2019-07-23 06:34 GMT   |   Update On 2019-07-23 08:10 GMT
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் இரண்டாவது ரெயில் இன்று புறப்பட்டது.

வேலூர்:

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 10 மில்லியன் லிட்டர் (1கோடி லிட்டர்) குடிநீரை ரெயில் வேகன்கள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஒரு ரெயிலில் 50 வேகன்கள் பொருத்தப்பட்டு 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் வீதம் ஒருநாளைக்கு 4 தடவை 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

அதன்படி சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் முதல் ரெயில் 12-ந் தேதி புறப்பட்டது. அந்த ரெயில் சென்னை சென்று வர தண்ணீர் பிடிக்க, இறக்க என மொத்தம் 16 மணி நேரம் ஆகிறது. இதனால் தினசரி ஒரே ஒரு ரெயிலில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு சென்றால்தான் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும்.

இதனால் கூடுதலாக 3 ரெயில்கள் தர வேண்டும் என மெட்ரோ அதிகாரிகள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ராஜஸ்தானில் இருந்து 50 வேகன் கொண்ட மற்றொரு ரெயில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 


இந்த ரெயில் ஜோலார்பேட்டைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வந்தது. உடனடியாக அதில் நீர் நிரப்பும் பணிகள் நடந்தன. பின்னர் நீர் அளவீடு செய்யப்பட்டது. குடிநீரின் தரமும் ஆய்வு செய்யப்பட்டது. 50 வேகன்களில் 2.5 மில்லியன் தண்ணீர் நிரப்பப்பட்டது.

இதையடுத்து மெட்ரோ அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன்னிலையில் ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இன்று மாலை வில்லிவாக்கத்தை அடையும். அங்கிருந்து கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சப்ளை செய்யபட உள்ளது.

முதல் ரெயில் இரவில் இயக்கப்படுகிறது. 2-வது ரெயில் காலையில் இயக்கப்படும். 2-வது ரெயில் இயக்கத்தை பார்த்துவிட்டு மேலும் ஒரு ரெயில் இயக்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 ரெயில்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதால் சென்னைக்கு தினமும் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.

Tags:    

Similar News