செய்திகள்
மடிக்கணினி வழங்கக்கோரி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2019-07-16 17:49 GMT   |   Update On 2019-07-16 17:49 GMT
தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி காரைக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி:

காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி நேற்று காலை திடீரென வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மடிக்கணினி வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்ததும் காரைக்குடி தாசில்தார் பாலாஜி, காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் ஆகியோர் கல்லூரிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவர்கள் தங்களது கோரிக்கையை எழுத்து மூலம் எழுதிக் கொடுத்தால் அதை அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் பாலாஜி உறுதியளித்தார். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரியில் இருந்து வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

இதேபோல் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கூறி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு சென்ற செட்டிநாடு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு திரும்பி சென்றனர். 
Tags:    

Similar News