செய்திகள்
பேராவூரணி பெரிய குளத்தை தூர்வாரும் பணியை மத்திய குழுவினர் ஆய்வு

பேராவூரணியில் பெரியகுளம் தூர்வாரும் பணி - மத்திய குழுவினர் ஆய்வு

Published On 2019-07-16 03:31 GMT   |   Update On 2019-07-16 03:31 GMT
பேராவூரணியில் உள்ள பெரியகுளத்தை தூர்வாரும் பணியை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
பேராவூரணி:

பேராவூரணியில் உள்ள பெரியகுளம் 550 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண்மேடாக காணப்பட்டது. இப்பகுதியில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் பெரியகுளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் பாதைகளும் அடைபட்டிருந்தன. இதனால் குளம் வறண்டு கிடந்தது.

இதையடுத்து குளத்தை தூர்வார பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பை இளைஞர்கள் ஏற்படுத்தி, கடந்த 3 வாரங்களாக பெரிய குளத்தை தூர்வாரி வருகிறார்கள். இந்த பணிக்கு கிராம மக்களும் நிதி உதவி அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட பகுதிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். நேற்று பேராவூரணி வந்த மத்திய குழுவை சேர்ந்த அதிகாரி ராஜீவ்சக்சேனா, ஜிஜித் மோகன் உள்ளிட்டோர் பெரிய குளத்தை தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் இளைஞர்களுக்கு மத்திய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து, ஆலோசனைகளை வழங்கினர்.

ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம், குளத்தை தூர்வாரும் பணிக்கு நிதி உதவி வழங்கும்படி கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆய்வின்போது பேராவூரணி வட்டார வளர்ச்சி அதிகாரி சடையப்பன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் பிரசன்னா, அன்பரசன், பேராவூரணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் துரைமாணிக்கம், பேராவூரணி வர்த்தக சங்க தலைவர் ராஜேந்திரன், கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க ஆலோசகர் காந்தி, தங்க கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். 
Tags:    

Similar News