செய்திகள்
காதல் ஜோடி

மெக்கானிக்கை கரம் பிடித்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பட்டதாரி பெண்

Published On 2019-07-14 12:49 GMT   |   Update On 2019-07-14 12:49 GMT
பெற்றோர் எதிர்ப்பை மீறி மெக்கானிக்கை கரம் பிடித்த பட்டதாரி பெண் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 27). இவர் பைக் மெக்கானிக். இவரது உறவினர் சென்னிமலை அடுத்துள்ள நாமக்கல் பாளையம் ரோடு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் நவீன்அரசி (20). பி.காம் பட்ட வகுப்பு முடித்துள்ளார்.

இருவருக்கும் இவர்களது பெற்றோர் மாமன், அத்தை உறவாகும். இதனால் இருவரும் பல ஆண்டுகளாக பழகி வந்தனர். பின்னர் அது காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய இருவரது பெற்றோரும் முடிவு செய்தனர்.

இதன் பேரில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த நிலையில் இருவரது உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நவீன் அரசியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் நிற்கும் சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நவீன் அரசி வீட்டை விட்டு வெளியேறினார். இவரை காணவில்லை என அவரது பெற்றோர் தேடி வந்தனர். இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் காதலர்கள் முருகானந்தம்- நவீன் அரசி இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு கோரி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர். இதை அறிந்த இருவரின் உறவினர்களும் போலீஸ் நிலையத்தில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு போலீசார் இருவரின் பெற்றோர்களையும் சமாதானம் செய்ய அழைத்தனர். முருகானந்தத்தின் பெற்றோர் மட்டும் அங்கு வந்தனர். ஆனால், நவீன் அரசியின் பெற்றோர் அங்கு வர வில்லை.

இதனால் நீண்ட நேரம் அங்கு காத்திருந்த திருமண ஜோடி மற்றும் உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து மணமகனுடன் நவீன் அரசியை அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News