செய்திகள்
குடிநீர் சோதனை ஓட்டம் தொடங்கியது

சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது

Published On 2019-07-08 05:11 GMT   |   Update On 2019-07-08 05:11 GMT
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் தொடங்கியது.

வேலூர்:

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது.

மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே கேட் பகுதிக்கு குழாயில் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ரெயில் வேகன்களில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

இதற்காக குடிநீர் வாரியம், ரெயில்வே துறை, மின்சார வாரியம் சார்பில் இரவு பகலாக நடந்து வந்த வேலைகள் முடிவுக்கு வந்தது.

பார்சம்பேட்டையில் ரெயில் வேகன்களில் தண்ணீர் பிடிப்பதற்காக 50 குடிநீர் பைப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் மகேஸ்வரன், தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிவடைந்துள்ளது. மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை வரை 3½ கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு இன்று சோதனை செய்யப்பட்டது.

இதில் எங்கேயாவது தண்ணீர் கசிகிறதா? குழாய்கள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

நாளை மறுதினம் புதன்கிழமை காலையில் சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்லும் பணி தொடங்குகிறது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தினமும் ரெயிலில் 4 முறை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு முறை 25 லட்சம் லிட்டர் குடிநீர் என்று மொத்தம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சென்னை மாநகர பகுதிக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

Tags:    

Similar News