செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

தமிழகத்தின் குடி தண்ணீர் பிரச்சினைக்காக அதிகாரிகளை தண்டிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு

Published On 2019-07-02 10:32 IST   |   Update On 2019-07-02 13:33:00 IST
தமிழகத்தின் குடி தண்ணீர் பிரச்சினைக்காக அதிகாரிகளை தண்டிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை:

பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் அன்றாடம் குடிநீருக்காக தவித்து வருகிறார்கள். நீர்நிலை பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டதால் பருவழை காலங்களில் மழைநீர் சேமிக்க முடியாமல் கடலில் வீணாக கலந்துவிடுகிறது. இதனால் கோடைக்காலங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் வக்கீல் சி.ஆர்.ஜெயா சுகின் மூலமாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ஏரி, குளங்கள், தண்ணீரின்றி வறண்டு விட்டன. அவற்றில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை.

 


 

சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினை உலகளாவிய அளவில் எதிரொலித்து வருகிறது. சென்னையின் தண்ணீர் பிரச்சினை உலக அளவில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

2 ஆயிரம் குளம், ஏரிகள் வறண்டு போனதற்காகவும், ஏரி, குளம் ஆக்கிரமிப்புகளுக்காகவும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் 2 ஆயிரம் ஏரி, குளங்கள் நீரின்றி வறண்டு போனதற்காக அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க முடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை சுற்றி முறையாக ஏரி, குளங்களில் மழை காலங்களில் தண்ணீர் சேமிக்கப்பட வேண்டும்.

வங்காள விரிகுடா கடலில் மழை காலங்களில் வீணாக கலக்கும் மழை தண்ணீரை ஆறு, கால்வாய்கள் வெட்டி சேமிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Similar News