செய்திகள்

பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து செங்கோட்டையன் தவறான தகவலை கூறி வருகிறார் - மீனாட்சி சுந்தரம்

Published On 2019-06-17 05:21 GMT   |   Update On 2019-06-17 05:21 GMT
பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தவறான தகவலை கூறி வருகிறார் என்று மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பள்ளிகளில் தண்ணீர் இல்லை என்ற தவறான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடும் கோடை காரணமாக ஒரு வாரம் கழித்து பள்ளிகளை திறக்க கேட்டு கொண்டோம். ஆனால் ஆசிரியர்களை பழிவாங்குவதாக நினைத்து உடனே பள்ளிகளை திறந்தார்கள். இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரையிலும் பள்ளி மாணவர்களுக்கு அரசு பாடப்புத்தகங்களை வழங்க வில்லை. ஓய்வு பெறும் நாளில், அரசு ஊழியர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.


போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் , ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த போக்கு காரணமாக அ.தி.மு.க. அரசு ஊழியர்களின் 20 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இதேநிலை நீடித்தால் அடுத்து வரும் தேர்தல்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 100 சதவீத வாக்குகளை இழக்க வேண்டி வரும். தமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும். மும்மொழிக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியை திணிக்கும் நடவடிக்கை தான். இதனை எதிர்த்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News