செய்திகள்
கோப்புப்படம்

மகன் கோபம் அடைய காரணம் என்ன?- தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

Published On 2019-06-11 10:32 IST   |   Update On 2019-06-11 10:39:00 IST
மகன் கோபம் அடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது:-

திருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன். அப்போது மரியாதைக்குரிய உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதால், நான் திருச்சி வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லிவிட்டு அவர்களை அனுப்ப முயன்ற போது கட்சி நிகழ்ச்சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் என் மகன் சற்று கோபமடைந்து கட்சிதான் முக்கியமா? என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார். இந்த குடும்ப சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது...


குடும்பத்தலைவியாகவும் இருந்துகொண்டு அரசியல் தலைவியாகவும் இருக்கும் போது, குடும்பத்தைவிட அரசியலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் பல தலைவர்கள் குடும்பத்தில் சந்திக்கக் கூடிய நிகழ்வுகள் தான் இவை.

ஏன் ! அரசியல்வாதியின் மகளாக வளர்ந்த நான் இந்த வலியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன்.

ஆக சாதாரணமாக நடந்த ஓர் குடும்ப நிகழ்வை பலரும் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டபோது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது, மனதை ரணப்படுத்தினாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக்கொள்கிறேன்... அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள்...

பதில்இதுதான்..

எந்தெந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்...

என் பணிகளும், பயணங்களும் தொடரத்தான் செய்யும். இதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்... சவால்களை எதிர் கொள்வதே வாழ்க்கை...

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News