செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற காவலாளி மரணம்

Published On 2019-06-06 15:52 IST   |   Update On 2019-06-06 15:52:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற காவலாளி உயிரிழந்தார். டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வரவில்லை என்று உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்:

சுங்குவார்சத்திரம் அடுத்த குண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 51). அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 31-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் அதே மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென ரகுபதிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சுகுணா அங்கிருந்த நர்சுகளிடம் டாக்டர்களை அழைத்து வருமாறு தெரிவித்தார்.

ஆனால் அதிகாலை 2 மணி வரை எந்த டாக்டர்களும் ரகுபதிக்கு சிகிச்சை அளிக்க வில்லை என்று கூறப்படு கிறது. இதனால் ரகுபதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்த ரகுபதியின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். டாக்டர்களின் அலட்சியத்தால் ரகுபதி உயிர் இழந்து இருப்பதாக கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தொடர்ந்து மருத்துவமனை வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து ரகுபதியின் உறவினர்கள் கூறுகையில், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் ரகுபதி உயிர் இழக்க நேரிட்டது. இதுபோன்ற பாதிப்பு இனி யாருக்கும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Similar News